Wednesday, January 13, 2010

கனவுக்கு கலர் அடிக்கும் கலக்கல் கூட்டணி


கனவுக்கு கலர் அடிக்கும் கலக்கல் கூட்டணி!

எத்தனை வெள்ளையாக இருந்தாலும் இன்னமும் இளைஞர்களின் ‘தல‘ அப்துல் கலாம்தான்! இந்தியாவில் இருக்கிற மொத்த மக்கள் தொகையில் 50% இளைஞர்கள். அவர்களில் 50% பேர் அவரைப் போல வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இன்னொரு 50% பேர் அவர் காட்டிய திசையில் முன்னேறவேண்டும் என்ற எண்னத்தோடு இருக்கிறார்கள்.

இந்த இளைஞர்களின் வேகத்தை இன்னமும் துடிப்பாக்க அப்துல் கலாமின் கவிதை வரிகளையே ஆயுதமாக்கி களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன். இவருக்குத் துணையாக இசையோடு வருகிறார் யுவன்ஷங்கர்ராஜா!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் எழுதிய

song of youth என்ற புகழ்பெற்ற பாடல், பிரமாண்டமான மியூசிக் ஆல்பமாகத் தயாராகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் தனபால் தயாரித்து இயக்கி உருவாக்கும் இந்த ஆல்பத்தை தன் இன்னிசையால் மெருகேற்றுகிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்த ஆல்பத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா. மின்வெளி மீடியா வொர்க்ஸ் நிறுவனமும் ஜெனரேஷன் நவ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த ஆல்பத்தில் அப்துல்கலாமும் யுவனும் திரையில் தோன்றுகிறார்கள். இவர்களோடு இளைய தலைமுறையின் ரோல்மாடல்களான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவின் பாரம்பரியம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படும் வரலாற்று தலங்களான திருமலை நாயக்கர் மகால், தாஜ்மகால், இந்தியா கேட் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த இளைஞர் எழுச்சி கீதம் குறித்து ஆல்பத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தனபால் பத்மநாபனிடம் கேட்டபோது, ‘‘இப்போது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் 25 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அதனால் இது இளைஞர்களின் தேசமாகக் கருதப்படுகிறது. முன்பு எப்போதையும் விட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் சாதனைப் பாதைகளும் அதிகரித்துள்ளன.

வரலாற்றில் ஒவ்வொரு நாடும் எப்போதோ ஒருமுறைதான் இப்படி இளைஞர்களின் தேசமாகக் காட்சியளிக்கும். அந்த வகையில் இது நம் முறை. இதைக் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்த கணத்தில் மனக் கண் முன்னே தோன்றியது இளைஞனான என்னை ஈர்த்த அப்துல் கலாமின் வரிகள்தான்! அவருடைய வரிகள்தான் இன்றைய இளைஞர்களின் எழுச்சி கீதமாக இருக்கமுடியும் என்று உறுதியாக நம்பினேன்.

அந்த எண்ணத்தோடு அவரை அணுகினோம். இளைஞர்களைக் கொண்டாடவும், அவர்களுக்கு ஊக்கம் தந்து சாதிக்கத் தூண்டவும்தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார் அப்துல் கலாம். இந்தப் பாடல் ஆல்பமாக வந்தால் அது பல லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும். அவர்களது கனவின் அடையாளமாகவும் லட்சியத்தின் கலங்கரை விளக்கமாகவும் அமையும்… அப்துல் கலாமின் கனவுகளுக்கு இசைவண்ணம் சேர்த்திருக்கிறார் யுவன். புதுமையான இந்தக் கூட்டணி இந்தப் புதிய ஆண்டை எழுச்சியோடு தொடங்க வைக்கும்’’ என்றார்.

சீக்கிரமே செவிகளைத் தொடப் போகும் இந்த ஆல்பம் இதயத்தையும் தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!


0 comments:

Post a Comment